×

கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் பழுதடைந்த சிசிடிவி கேமராக்கள்: சரி செய்ய கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்க தலைமை அலுவலக கட்டிடத்தில் கடந்த 6 மாதங்களாக செயல்பாட்டில் இல்லாத சிசிடிவி கேமராக்களால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட தென்மேல்பாக்கம் கிராமத்தில், தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவு கடன்சங்க தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

தென்மேல்பாக்கம், அஞ்சூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் கடன் பெறுவதற்காக இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கடன் சங்கம் அமைந்துள்ள இடம் பாதுகாப்பில்லாத பகுதியில் செயல்பட்டு வருகிறது. பயனாளிகள் அடமானம் வைக்கும் நகைகள் மற்றும் பத்திர ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அதனை கருத்தில் கொண்டு இங்கு ஏதும் திருட்டு சம்பவங்கள் நடந்தால் அதனை எளிதில் கண்டறியும் விதமாக, 2 சிசிடிவி கேமராக்கள் அலுவலகத்தின் முன்பு பொருத்தப்பட்டிருந்தன. தற்போது அந்த 2 கேமராக்களும் பழுதடைந்து கடந்த 6 மாதமாக செயல்படவில்லை. மேலும், அந்த கேமராக்கள் தொங்கிய நிலையில் கேட்பாரற்று கிடக்கின்றன. கடன் சங்க அதிகாரிகள் உடனே கேமரா பழுதை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் பழுதடைந்த சிசிடிவி கேமராக்கள்: சரி செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cooperative Credit Union ,Chengalpattu ,South West ,City Cooperative Credit Union ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...